தொல்காப்பியம், புறத்திணை இயல், துறை விளக்கம்
தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்க்கைப் பொருளின் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் இலக்கிய-நெறி விளக்கப்பட்டுள்ளது. அதில் கணவன்-மனைவி உறவு அகத்திணையிலும், அதில் திருமணத்துக்கு முன் நிகழும் காதலன்-காதலியர் உறவுமுறைகள் களவியல் பகுதியிலும், திருமணத்துக்குப் பின்னர் நிகழும் கணவன் மனைவியர் உறவுமுறைகள் கற்பியல் பகுதியிலும் கூறப்பட்டுள்ளன.
அகம் என்பது வீடு. வீட்டில் வாழும் ஆண்-பெண் வாழ்க்கைப்பாங்கு அகம். மற்றைய வாழ்க்கைப் பாங்கு புறம்.
புறவாழ்க்கைப் பாங்கினைத் தொல்காப்பியம் புறத்திணையியலில் விளக்குகிறது. இது வெட்சி (வெ), வஞ்சி (வ), உழிஞை (உ), தும்பை (து), வாகை (வா), காஞ்சி (கா), பாடாண் (பா) ஆகியேழு திணைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திணையும் பல துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொறைகளின் பெயர்கள் அகர-வரிசையில் அடுக்கப்பட்டு அவற்றிற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. [1]
புற = புறத்திணையியல்
எண்-குறி – இந்த இயலில் உள்ள நூற்பா எண்
எழுத்துக்குறி: உ=உழிஞை கா=காஞ்சி து=தும்பை பா=பாடாண் வ=வஞ்சி வா=வாகை வெ=வெட்சி,
அ வரிசை
[தொகு]- அரசர் பக்கம் – ஐந்து வகை – புற 16 வா
- அரவம், படை இயங்கு அரவம் - வெட்சித்திணைத் துறைகளில் ஒன்று. படை நடக்கும் ஆரவாரம் - புற 3 வெ
- அருநிலை – தலை வெட்டுப்பட்டு உயிருடன் உள்ள யாக்கையின் வாளும் வில்லும் போரிடுதல் – புற 13 து
- அருளொடு புணர்ந்த பக்கம் – அருள் தேடும் தவம் – புற 17 வா
- அவையகம் – எட்டு வகை மக்கள் கூடித் தீர்ப்பளிக்கும் இடம் – புற 17 வா
- அறிவன் தேயம் – முக்காலத்திலும் முறைகேடு நிகழாமல் செயலாற்றிவரும் அறிவன் பக்கம் – புற 16 வா
- ஆகோள் - ஆனிரை கவர்தல் - புற 3 வெ
- இயன்மொழி வாழ்த்து – ஒருவனின் இயல்பை வாழ்த்துதல் – புற 29
- உண்டாட்டு - விருந்து உண்டு வெற்றிவிழா கொண்டாடுதல் - புற 3 வெ
- உழிஞை – 8 வகை – புற 9 உ
- உழிஞை – கோட்டை முற்றுகை, கோட்டையைக் கைப்பற்றல் – புற 8 உ
- உழிஞை – மருதத் திணையின் புறன் – புற 8 உ
- உழிஞை, நொச்சி – துறை 12 – புற 11 உ நொ
- உன்னநிலை - புறங்கொடாத வீரருக்கு நாட்டப்படும் வெற்றித்தூண் - புற 5 வெ
- ஊர்கொலை - பகை ஊரினரைக் கொல்லல் - புற 3 வெ
- ஊரொடு தோற்றம் – உலா – புற 25
- ஏணி மயக்கம் – மதிலைக் கடக்க ஏணி ஏறுதல் – புற 11 உ நொ
- ஏனோர் (வணிகர், வேளாளர்) பக்கம் – புற 16 வா
- ஒழுக்கத்துக் கண்ணுமை – கட்டுப்பாட்டோடு கூடிய ஒழுக்கம் – புற 17 வா
- ஓம்படை – வழங்கி வழியனுப்புதல் – புற 30
க வரிசை
[தொகு]- கடவுள்-வாழ்த்து – கொடிநிலை, கந்தழி, வள்ளி ஆகிய மூன்று பாங்குகளை உணர்த்தும். (கொடிநிலை என்பது கடவுளானவர் தனக்கு நிகர் இன்றிக் கொடிகட்டிப் பறக்கும் நிலை), (கந்தழி என்பது துணையாக இருக்கும் வலிமையை அழித்தல்), (வள்ளி என்பது கடவுளின் வள்ளல் தன்மை) – புற 27
- கடிமனை நீத்த பால் – இல்லறத்தைத் துறத்தல் – புற 17 வா
- கடைக்கூட்டு-நிலை – பரிசில் வேண்டுதல் – புற 30
- கடைநிலை – வருந்தி வந்தவன் வாயிலில் நிற்பதை வாயிலோன் உரைத்தல் – புற 29
- கண்படை நிலை – உறக்கம் கொள்ளப் பாடுதல் – புற 29
- கபிலை கண்ணிய வேள்வி – பசுவைத் தானமாகத் தரும் வேள்வி – புற 29
- கரந்தை - மனைவிக்கு உரிய மாண்பு - புற 5 வெ
- கல் - காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல் - புற 5 வெ
- கழல்நிலை - வீரக்கழல் அணிந்துள்ள கோட்பாட்டில் செயலாற்றுதல் - புற 5 வெ
- களவழி – ஏரோர் களவழி, தேரோர் களவழி – புற 17 வா
- கற்சிறை-ஒருவன் – ஆற்று வெள்ளத்தைத் தடுக்கும் கற்சிறை (கல்-கலிங்கு-அணை) போல பகைவர் படையைத் தடுத்து நின்ற ஒருவன் - புற 7 வ
- காஞ்சி – பல வழியிலும் நிலையில்லா உலகப் பாங்கைக் கூறுவது – புற 18 கா
- காஞ்சி – பெருந்திணையின் புறன் – புற 18 கா
- காடு-வாழ்த்து – உலக மரபு அறிய சுடுகாட்டை வாழ்த்துதல் – புற 19 கா
- காந்தள் - வேலன் வெறியாடும் விழா - புற 5 வெ
- காமம் நீத்த பால் – துறவு – புற 17 வா
- காவல் – பிழை செய்தோரைத் திருத்திப் பாதுகாத்தல் – புற 17 வா
- குடிநிலை - மறக்குடியின் பெருமையைப் பேசுதல் - புற 4 வெ
- குடிப்பூ - மூவேந்தர் சூடிப் போரிடும் பூ, சேரன் போந்தை(பனை), பாண்டியன் வேம்பு, சோழன் ஆர்(ஆத்தி) - புற 5 வெ
- குடைநாள்-கோள் – பகைவன் குடைநிழலில் இருந்த நாட்டைத் தன் குடைக்கீழ்க் கொண்டுவந்த நாள் விழா – புற 11 உ நொ
- குடைநிழல் மரபு – வெண்கொற்றக்குடை விழா, அரியணை ஏறிய நாள் விழா – புற 30
- குரவை – முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை – புற 17 வா
- குறுமை – தனி ஒருவனாகப் போரிடல் – புற 10 உ
- கூழை – ஒருவனுக்கு உதவியாகப் பின் நின்று போரிடுதல் – புற 14 து
- கூற்றம் – உடலும் உயிரும் கூறுபடும் பெருமை மாற்றமுடியாதது எனல் – புற 19 கா
- கைக்கிளை – புகழை விருபாதவனைப் புகழ்தல் – புற 29
- கையறுநிலை – இறந்தவருக்காக இறவாதவர் புலம்பல் – புற 19 கா
- கொடை – இடையீடு இல்லாமல் கொடுத்துக்கொண்டே இருத்தல் – புற 17 வா
- கொடை - வினைஞர் வெற்றிக்கு வழங்கும் கொடை - புற 3 வெ
- கொடைநிலை – கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் – புற 29
- கொற்றம் – மனம் கொள்ளாப் பகை நாட்டை வெல்லல் – புற 10 உ
- கொற்ற-வள்ளை – புகழ் பாடுதல் பாணாண். (வெற்றியைப் பாடின் வஞ்சித்திணை) – புற 27
- கொற்றவை-நிலை - வெற்றித்தேவி விழா - புற 4 வெ
ச வரிசை
[தொகு]- சான்றோர் பக்கம் – பகைவர் உயிரைப் பலி கொடுத்தல் – புற 17 வா
- செந்துறை வண்ணம் – இப் பாவால் பரவுதல், வாழ்த்தல் பகுதிகள் அமையும் – புற 22
- செவியறிவுறூஉ – திருந்தும்படி கூறுதல் – புற 29
த வரிசை
[தொகு]- தந்துநிறை - ஆனிரைகளைக் கொண்டுவந்து நிறுத்துதல் - புற 3 வெ
- தபுதார-நிலை – காதலியை இழந்தவன் கலக்கம் – புற 19 கா
- தலைப்பெயல்-நிலை – மகப்பேற்றில் தாய் மாய்தல் – புற 19 கா
- தலையொடு முடிந்த நிலை – போர்களத்தில் மாண்ட தன் கொண்டானோடு தன் முகத்தையும் முலையையும் தழுவிக்கொண்டு உடன் மாய்தல் – புற 19 கா
- தழிஞ்சி – தன் படை அழியும்போது தனி ஒருவன் பகைவரைத் தடுத்து நிற்றல் – புற 7 வ
- தாபத-நிலை – காதலனை இழந்தவள் கலக்கம் – புற 19 கா
- தாபதப் பக்கம் – எட்டு வகையான துறவுநிலை – புற 16 வா
- தார்நிலை – வேந்தனைப் பலர் தாக்கும்போது ஒருவன் தனித்துப் போராடி வேந்தனைக் காத்தல் – புற 14 து
- தும்பை – 12 துறை – புற 14 து
- தும்பை – கோட்டைப் போரில் தோற்றவனைத் துறத்திச் சென்று அவன் நாட்டிலும் அழித்தல் – புற 12 து
- துயிலெடை நிலை – இசை பாடித் துயில் எழுப்புதல் – புற 30
- தொகைநிலை – கோட்டைப் போரில் இரு அரசர்களும் வீழ்ந்துபடல் – புற 11 உ நொ
- தொகைநிலை – போரிட்ட இரு அரசர்களும் மாளல் – புற 14 து
- தொடாக் காஞ்சி – புண்பட்டுக் கிடப்பவனின் அச்சம் போக்கி மனைவி இன்னகையோடு பேணல் – புற 19 கா
- தோல் – தற்காப்புப் படை – புற 10 உ
ந வரிசை
[தொகு]- நாள்-நிமித்தம் – நல்ல நாள் பார்த்தல் – புற 30
- நுவல்-வழித் தோற்றம் - சொன்னபடி செய்து முடித்துத் தோன்றுதல் - புற 3 வெ
- நூழில் – நாற்புறமும் பலர் தாக்கும்போது தனி ஒருவன் தடுத்துப் போரிடுதல் – புற 14 து
- நெடுமொழி - இன்னது செய்வேன் எனக் கூறிக்கொண்டு முயலுதல் - புற 5 வெ
- நொச்சி – கோட்டைக்குள் இருந்தவர் வீழ்தல் (பணிதல்) – புற 11 உ நொ
ப வரிசை
[தொகு]- படை, முப்படை – தானை, யானை, குதிரை – புற 14 து
- பயன் எதிரச் சொன்ன பக்கம், (ஆற்றுப்படை) – தான் பெற்ற வளத்தைப், பெறாத கூத்தர், பாணர், பொருநர், விறலி, ஆகியோருக்கு வழங்கியவனிடம் செல்லும் வழி கூறி அனுப்புதல். – புற 30
- பரிசில்-விடை – பரிசில் பெற்றவன் விடைபெறுதல், பெறாதவன் விடை பெறுதல் – புற 30
- பாசறை – வேனில் பாசறை, கூதிர் பாசறை – புற 17 வா
- பாசி – அகழிநீர்ப் போரில் வீழ்தல் – புற 11 உ நொ
- பாடாண் – எட்டு பகுதி – புற 20 பா
- பாடாண் – கைக்கிளைத் திணையின் புறன் – புற 20 பா
- பாதீடு - ஆனிரைகளை ஊராருக்குப் பங்கிட்டுக் கொடுத்தல் - புற 3 வெ
- பார்ப்பனப் பக்கம் – ஆறு வகை – புற 16 வா
- பாழி – அகழிப்போர் – புற 14 து
- பிள்ளை-நிலை - எதிர்ப்போரை எதிர்த்து நிற்றல், வெட்டுப்பட்டு வீழ்தல் என இரண்டு வகை - புற 5 வெ
- பிள்ளையாட்டு - வெற்றி வீரனுக்கு நாடு நல்கும் விழா - புற 5 வெ
- புதுமை – கோட்டையை முற்றியவன் வீழ்தல் (தோற்றல்) – புற 11 உ நொ
- புள்-நிமித்தம் – புள்-ஒலி கேட்டல் – புற 30
- புறத்திறை – முற்றுகை - புற 3 வெ
- புறநிலை வாழ்த்து – அறியாதவன் போல வாழ்த்துதல் – புற 29
- பூசல் மயக்கம் – புகழோடு மாண்ட மகனைச் சுற்றிச் சுற்றத்தார் அழும் பூசல் – புற 19 கா
- பூசல்-மாற்று - எதிர்த்துப் போரிடுதல் - புற 3 வெ
- பூவைநிலை - புகழைப் போற்றிச் சூட்டப்படும் காயாம்பூப் பதக்கம் - புற 5 வெ
- பெருஞ்சோற்று நிலை, பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை – போருக்குப் புறப்படும்போது அரசன் அளிக்கும் விருந்து - புற 7
- பெருமங்கலம் – பிறந்த-நாள் விழா – புற 30
- பேய்ப்பக்கம் – போரில் புண் பட்டுக் கிடப்பவன் பேணும் சுற்றத்தார் இல்லாமல் பேதுற்றுக் கிடத்தல் – புற 19 கா
- பேராண் பக்கம் – அரசன் வழங்கும் விருதுப்பொருளைப் பற்றிக் கவலைப்படாமல் பகைவர்களைக் கைதாக்கிக் கொண்டுவந்த பேராண்மை - புற 7 வ
- பையுள் – தன் உடல் பையுள் உண்டாகும் தாங்கமுடியாத துன்பம் – புற 19 கா
- பொருநர் கண் – பால் அறிந்த மரபினராகிய பொருநர் பக்கம் – புற 16 வா
- பொருளொடு புணர்ந்த பக்கம் – பொருள் தேடும் பணி – புற 17 வா
ம வரிசை
[தொகு]- மகட்பால்-காஞ்சி – முதுகுடி மக்கள் வேந்தனுக்கு மகளைத் திருமணம் செய்து தர அஞ்சுதல் – புற 19 கா
- மண்ணுமங்கலம் – கோட்டையை வென்று அதன் உச்சியை நீராட்டல் – புற 11 உ நொ
- மண்ணுமங்கலம் – கோட்டையை வென்று நீராடிய நாள் – புற 30
- மண்ணுமங்கலம் – புகழில் குளிக்கும் நாள்-விழா – புற 30
- மன்னை(க்காஞ்சி) – இறந்தவன் புகழைப் பாடுதல் (ஒப்பாரி) – புற 19 கா
- மாராயம் – மாராயம் என்னும் அரச-விருது, மார்பு+ஆயம், - புற 7 வ
- மாலை-நிலை – கணவனுக்கு மூட்டிய தீயில் தானும் மாலையிட்டுக்கொண்டு இறங்கி மனைவி மாய்தல் – புற 19 கா
- முதுபாலை – உடன்போக்கின்போது கணவனை இழந்தவன் தனிமையில் புலம்பல் – புற 19 கா
- முனைஞர் - போர் முனை வீரர் - புற 2 வெ
- மூதானந்தம் – கணவனுடன் மாய்வாளைக் கண்டோரின் முதிய ஆனந்தம் – புற 19 கா
வ வரிசை
[தொகு]- வஞ்சி – துறை 13 – புற 7 வ
- வஞ்சி - நாட்டைக் கைப்பற்ற விரும்புபவனைச் சென்றழித்தல், புற 6 வ
- வஞ்சி - முல்லைத்திணையின் புறன், புற 6 வ
- வஞ்சி(க்காஞ்சி) – கணவனைக் குத்திய வேலால் மனைவி தன்னைக் குத்திக்கொண்டு மாய்தல் – புற 19 கா
- வஞ்சினக்காஞ்சி – இன்னது செய்யாவிட்டால் இன்னது ஆவேன் என்று சினத்தோடு கூறல் – புற 19 கா
- வல்லாண் பக்கம் – வாழ்க்கையை மதிக்காமல் வேலையும் ஆற்றலையும் மதித்துப் பகை வெல்லும் கோட்பாடு – புற 17 வா
- வள்ளி, வாடாவள்ளி, - வயவர் என்னும் படைத்தலைவர் வள்ளிப்பூ போன்ற பொற்பதக்கம் - புற 5 வெ
- வள்ளை, கொற்ற வள்ளை – வெற்றியை வள்ளைப்பாட்டால் மகளிர் பாடுதல் – புற 7 வ
- வாகை – அவரவர் கொள்கையை மேம்படுத்திக் கூறல் – புற 15 வா
- வாகை – ஏழு வகை, பார்ப்பனப் பக்கம், அரசர் பக்கம், வணிகர் பக்கம், வேளாண் பக்கம், அறிவன் தேயம், தாபதப் பக்கம், பொருநர் பக்கம் – புற 16 வா
- வாகை – பாலைத்திணையின் புறன் – புற 15 வா
- வாயுறை வாழ்த்து – மருந்து போல் பயன்படும் சொல்லால் வாழ்த்துதல் – புற 29
- வாள்-நாள்-கோள் – படைக்கல விழா – புற 11 உ நொ
- வாள்-மங்கலம் – வாளைப் போற்றும் விழா (இக்கால ஆயுத பூசை) – புற 30
- விரிச்சி, பாக்கத்து விரிச்சி - ஊராரின் நற்சொல்லைக் கேட்டல் புற 3 வெ
- விளக்கம், வென்றோர் விளக்கம் – வெற்றி பெற்றோரைப் புகழும் விழா – புற 7 வ
- விளக்கு-நிலை – வேலின் சிறப்பைப் பாடுதல் – புற 29
- வெட்சி - அரசன் அனுப்பும் முனைஞர் பகைநாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து வந்து பாதுகாத்தல் புற 2 வெ
- வெட்சி - குறிச்சித் திணையின் புறம் புற 1 வெ
- வெட்சி -வெட்சித் துறைகள் 14 புற 3 வெ
- வேய் - ஒற்றரால் வேவு பார்த்தல் புற 3
- வேய்ப்புறம் - வேவு பார்த்தவர் புலப்படுத்தியது, புற 3 வெ
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ தொல்காப்பியர், தொல்காப்பியம், இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை 14, 2010